Tuesday, December 18, 2012

வளம்தரும் சமுதாய மீன் வளர்ப்பு


கடந்த சில ஆண்டுகளாக குறைந்த செலவிலான புதிய தொழில்நுட்ப வேளாண் முயற்சிகள் விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், கூட்டாக சேர்ந்து செய்யும் புதிய சமுதாய அளவிலான முயற்சிகள் (New Community Initatives)பிரபலமாகி வருகிறது.
தமிழகத்தில் பல வேளாண் சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்புடன் சிறப்பாக, வெற்றிகரமாக பல மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள சமுதாய நாற்றங்கால் திட்டம் போன்று, கர்நாடக மாநில பாசன விவசாய அமைப்புகள் சமுதாய அளவில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு அதிகளவு லாபம் சம்பாதித்து வருகின்றனர்.
பாசன முறை சமுதாய மீன் வளர்ப்பு குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:
கர்நாடக மாநிலத்தில் உள்ள சோமசுந்தரா என்ற சிறிய பாசனஓடை சில ஆண்டுகளுக்கு முன்பு புறக்கணிக்கப்பட்டு இருந்தது. இத்தகைய சூழலில் நிலமில்லாத 33 குடும்பங்கள் இணைந்து கர்நாடக மாநில வேளாண்துறை பங்களிப்புடன், உலக வங்கி உதவியுடன் சமுதாய அளவில் மீன் பண்ணைகளை இங்கு அமைத்தன.
இதன் மூலம் பாசன ஓடை விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டு கிராமத்தில் உள்ள அனைத்து விவசாய கூட்டுறவுச் சங்கங்கள், இளைஞர் சங்கங்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்களை இணைத்து கிராமசபையின் உதவியுடன், வருவாய் திரட்டும் வரி விதிப்பு செயல்படுத்தப்பட்டது.
பின்னர் மீன் வளர்க்கும் உரிமைகள் பெறப்பட்டு சமுதாய அளவில் மீன் வளர்க்கும் பணிகளை தொடங்கினர்.
பாசனக் குட்டையில் சுண்ணாம்பு மற்றும் இயற்கை உரங்கள் போடப்பட்டன. பல நீர்க் களைகள் அகற்றப்பட்டன. 1.25 மீட்டர் ஆழத்துக்கு மீன்குட்டைகள் அமைக்கப்பட்டன. ÷இவற்றில் கட்லா, ரோகு, கெண்டை போன்ற 1,35,000 மீன் குஞ்சுகள் குட்டைகளில் விடப்பட்டன. குறிப்பாக ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கிராமவாசிகள் மீன் விட்ட பின்னர் காவல் பணிகளை மேற்கொண்டனர். பின்னர் ஐந்தரை மாதங்கள் கழித்து மீன்கள் நல்ல அளவை அடைந்த உடன் பகுதி அளவில் அறுவடைப் பணிகள் தொடங்கின.ஆறு மாதத்தில் அனைத்து மீன்களும் பிடிக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டன.
மீன்பிடிப்பு கூலியாக ஒரு கிலோவுக்கு ரூ.4 முதல் 5 வழங்கப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட வருவாயில் 50 சதவீதம் பாசன பயனாளிகள் சங்கத்துக்கும், மீதியுள்ள 50 சதவீதம் பணம், நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் வழங்கப்படுகிறது.
எட்டு மாத கால தண்ணீர் உள்ள ஓடையில் 533 கிலோ வரை மீன்கள் பெறப்பட்டு, மொத்த வருமானமாக ரூ. 2,70,000 கிடைத்துள்ளது. இவ்வாறு பாசன ஓடைகளை சரியான திட்டமிடல் மற்றும் விவசாய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சமுதாய அளவில் செயல்பட்டால் பாசன ஓடைகளை எளிதாகப் பராமரிக்கவும், அதன் வாயிலாக பல ஆக்கப்பூர்வமான பணிகள் மூலமாக கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி, தன்னிறைவு எளிதாக அடைய முடியும் என்கிறார் தி.ராஜ்பிரவீன்.

No comments:

Post a Comment